ஈரோட்டில் பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த 7 பேர் கைது
ஈரோட்டில் பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த 7 பேர் கைது செய்யப்பட்டனா்.
ஈரோட்டில் பீகார் மாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் தொழிலாளர்கள்
பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் பீபின்குமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி ஈரோடு வந்து இங்கேயே தங்கி உள்ளார். இவர் கடந்த 14-ந் தேதி வடமாநிலத்தில் இருந்து சென்னை, ஈரோடு வழியாக கேரளா செல்லும் ரெயிலில் வந்தார். அப்போது அவர் அருகில் பீகாரை சேர்ந்த வால்மீகி என்ற தொழிலாளியும், அவருடன் ஜிதேந்தர் குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்யகுமார் ஆகிய 5 நண்பர்களும் இருந்தனர். அவர்களுடன் பேச்சு கொடுத்தபோது வால்மீகியும் அவரது நண்பர்களும் வேலை தேடி கேரளாவுக்கு செல்வதாக தெரிந்தது.
அவர்களிடம், ஈரோடு வந்தால் அனைவருக்கும் வேலை வாங்கி தருவதாகவும் பீபின்குமார் கூறினார். தங்கள் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் என்பதால் தொழிலாளர்கள் அவரை நம்பினார்கள். ஈரோடு ரெயில் நிலையத்தில் அவருடன் 6 பேரும் இறங்கினர். அவர்களை ரெயில்நிலையம் அருகே ஒரு விடுதியில் தங்கவைத்தார்.
பணம் பறிப்பு
இதற்கிடையே பீபின்குமார் ஈரோட்டில் உள்ள அவரது சொந்த ஊர் நண்பர் மோதிலால் மற்றும் ஈரோட்டை சேர்ந்த நண்பர் புகழேந்தி ஆகியோரை அங்கு அழைத்திருந்தார். அவர்களும் ஒரு வேனில் வந்து பீகார் தொழிலாளர்கள் 6 பேரையும் ஏற்றி கடத்திக்கொண்டு சென்றனர்.பெரியசேமூரில் இருந்து தென்றல் நகர் செல்லும் வழியில் ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பீபின்குமாரின் கும்பலை சேர்ந்த 6 பேர் இருந்தனர். இவர்கள் பீகார் தொழிலாளர்கள் 6 பேரையும் தாக்கினார்கள்.
மேலும், பீகாரில் இருக்கும் உறவினர்களிடம் பேசி பணம் அனுப்பும்படி மிரட்டினார்கள். அவர்களும் தொடர்பு கொண்டு பேசி, புகழேந்தி என்பவரின் வங்கி கணக்கில் 'கூகுள்பே' மூலம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை பெற்றனர். இதுபோல் தொழிலாளி ஜிதேந்தர் குமாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.24 ஆயிரத்தை தங்கள் கணக்குக்கு மாற்றி பணத்தை பறித்தனர்.
போலீசில் புகார்
பின்னர் 6 பேரையும் அதே வேனில் ஏற்றிக்கொண்டு கோவை நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் அருகே இறக்கிவிட்டு, ஊருக்கு செல்வதற்கு கொஞ்சம் பணத்தையும் கொடுத்து விட்டு 9 பேரும் வேனில் தப்பிச்சென்றனர்.
செய்வதறியாது திகைத்த வால்மீகியும் அவரது நண்பர்களும் மீண்டும் சென்னை சென்று, அங்கு அவரது நண்பரான பூசன் என்பவருடைய துணையுடன் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அங்கிருந்தே போலீசில் புகார் செய்தனர்.
7 பேர் கைது
அதன்பேரில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கடத்தல் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜாபிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டுகள் ஆனந்த், அருண், சக்திவேல், ராஜாமுகமது, தினகர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று முன்தினம் வில்லரசம்பட்டி நால்ரோட்டில் வாகன சோதனை நடத்தியபோது கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட விவரங்களை ஒப்புக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கும்பல் தலைவனாக செயல்பட்ட பீபின்குமார் மற்றும் தமிழ்ச்செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேன் பறிமுதல்
அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள புகழேந்தி, மோதிலால் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பீபின்குமார் ஏற்கனவே வடமாநில தொழிலாளர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மாநில தொழிலாளர்களையே ஏமாற்றி கடத்தி பணம் பறித்த வடமாநில வாலிபரின் நடவடிக்கை குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.