ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 உயர்ந்தது
ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 உயர்ந்தது.
ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 உயர்ந்தது.
மஞ்சள் மார்க்கெட்
ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. மஞ்சள் விலை கடந்த சில மாதங்களாக உயராமல் இருந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். புதிய மஞ்சள் வரத்து ஏற்பட்டாலும் விலையில் பெரிய அளவில் உயர்வு ஏற்படவில்லை.
இந்தநிலையில் மஞ்சளின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,000 வரை உயர்ந்து உள்ளது. இதனால் ஒரு குவிண்டால் மஞ்சளின் விலை ரூ.8 ஆயிரத்தை கடந்தது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 435 முதல் ரூ.8 ஆயிரத்து 767 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 875 முதல் ரூ.7 ஆயிரத்து 899 வரையும், விற்பனையானது. இதேபோல் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 159 முதல் ரூ.8 ஆயிரத்து 869 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 893 முதல் ரூ.7 ஆயிரத்து 878 வரையும் விலை போனது.
ரூ.1,000 உயர்வு
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன்பிறகு புதிய மஞ்சளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால் மஞ்சளுக்கு சற்று விலை கிடைத்தது. இதையடுத்து மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அதிகமாக மழை பெய்ததால் தரம் குறைந்த மஞ்சளின் வரத்து காணப்பட்டது. எனவே விலையும் குறைந்தது.
ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டை பொறுத்தவரை புதிய மஞ்சள் வரத்து ஏற்பட்டபோது குவிண்டாலுக்கு ரூ.500 வரை உயர்ந்தது. கடந்த 10 நாட்களாக சேலம் மஞ்சள் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு குவிண்டால் ரூ.1,000 வரை விலை உயர்ந்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் நடவுப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு மாதத்தில் நிறைவடையும். அதன்பிறகு எவ்வளவு ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டு உள்ளது என்பதை பொறுத்து விலையில் மாற்றம் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.