ஈரோட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகை அபேஸ்; மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


ஈரோட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகை அபேஸ்; மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

ஈரோட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த மர்மநபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு

ஈரோட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த மர்மநபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தங்க சங்கிலி

ஈரோடு சூரம்பட்டி கிராமடை முதல்வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மனைவி ராமாயம்மா (வயது 82). தறிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் தறிப்பட்டையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டுக்கு அருகில் சென்றபோது, அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மூதாட்டியை நிறுத்தி நைசாக பேச்சு கொடுத்தனர்.

அப்போது அவர்கள், இந்த பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நகைகளை பாதுகாப்பாக எடுத்து செல்லும்படி கூறினர். மேலும், ராமாயம்மா அணிந்திருந்த 1¼ பவுன் நகையை கழற்றி எடுத்து செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தினர். இதனால் ராமாயம்மா அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றினார். அப்போது அந்த வாலிபர்கள் ஒரு கைப்பையை காண்பித்து அதில் நகையை வைத்து கொடுப்பதாக கூறினர். இதனால் தங்க சங்கிலியை ராமாயம்மா கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் கொடுத்த கைப்பையை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.

நூதன முறையில் அபேஸ்

வீட்டுக்கு சென்ற பிறகு கைப்பையை ராமாயம்மா பிரித்து பார்த்தார். அப்போது அதில் மண் மட்டுமே இருந்தது. நகையை காணவில்லை. அப்போதுதான் மூதாட்டி நூதன முறையில் மர்மநபர்கள் தன்னிடம் நகையை அபேஸ் செய்ததை உணர்ந்தார்.

இதுகுறித்து ராமாயம்மா கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் மர்மநபர்கள் நகையை அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story