ஈரோட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு வெள்ளை பூசணி விற்பனை அமோகம் பூ தொடுக்கும் பணி விறுவிறுப்பு


ஈரோட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு வெள்ளை பூசணி விற்பனை அமோகம் பூ தொடுக்கும் பணி விறுவிறுப்பு
x
தினத்தந்தி 22 Oct 2023 4:54 AM IST (Updated: 22 Oct 2023 4:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளை பூசணி விற்பனையும் பூ தொடுக்கும் பணியும் அமோகமாக நடந்தது.

ஈரோடு

ஈரோட்டில் ஆயுதபூஜையையொட்டி வெள்ளை பூசணி விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் பூ தொடுக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்தது.

ஆயுதபூஜை

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளையும் (திங்கட்கிழமை), விஜய தசமி நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் நேற்று முதல் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் நேற்று மாலை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு விடுமுறை விடப்பட்டன. இதன் காரணமாக ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை நேற்று அமோகமாக நடந்தது.

ஆயுத பூஜையை முன்னிட்டு திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளை பூசணிக்காய் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. நேற்று மட்டும் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் வெள்ளை பூசணிக்காய் கொண்டு வரப்பட்டுள்ளன. பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூ தொடுக்கும் பணி

இதேபோல் பூக்கள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. குறிப்பாக சம்பங்கி பூ அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதன் காரணமாக நேற்று சம்பங்கி பூ விலை உயர்ந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ சாதிப்பூ ரூ.500-க்கும், மல்லிகைப்பூ ரூ.1,200-க்கும், முல்லை- ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.280-க்கும், ரோஸ்- ரூ.400-க்கும் விற்பனையானது. ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை மேலும் உயரும் என்பதால், நேற்று பலரும் பூக்கள் வாங்கிச்சென்றனர். இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சம்பங்கி பூ தொடுக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்தது.

இதேபோல் கட்டி வைக்கப்பட்ட பூக்களின் விலை அதிகம் காணப்பட்ட போதிலும், அதிகமாகவே வாங்கி சென்றனர். மேலும் சத்தி, கோபி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த பூவன், தேன் வாழை உள்ளிட்ட வாழைப்பழங்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது. ஆயுத பூஜையை முன்னிட்டு பழக்கடை, பூக்கடை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் எப்போதும் இல்லாத அளவு கூட்டம் காணப்பட்டது.


Next Story