ஈரோட்டில் தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
பாடப்புத்தகங்கள்
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் பணம் செலுத்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் இருந்து பாடப்புத்தகங்களை வாங்கி கொள்ளலாம்.
இதற்காக தனியார் பள்ளிக்கூடங்கள் சார்பில் மொத்தமாக ஆன்லைனில் பணம் செலுத்தப்படுகிறது. அதற்கேற்ப பாடப்புத்தகங்களும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்படுகிறது.
86 சதவீதம்
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஈரோட்டுக்கு வந்தன. ஈரோடு பவானிரோட்டில் உள்ள மத்திய நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பாடப்புத்தகங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அதன்பிறகு தனியார் பள்ளிக்கூட பணியாளர்கள் காண்பித்த பணம் செலுத்திய ரசீதுகளை அதிகாரிகள் சரிபார்த்து பாடப்புத்தகங்களை வழங்கினர்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகள் செலுத்திய தொகைக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள் தயாரித்து வழங்கப்படுவதாகவும், இதுவரை 86 சதவீதம் பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.