ஈரோட்டில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை
ஈரோட்டில் இடி-மின்னலுடன் நேற்று மழை கொட்டித்தீர்த்தது.
ஈரோட்டில் இடி-மின்னலுடன் நேற்று மழை கொட்டித்தீர்த்தது.
இடி-மின்னலுடன் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. நேற்று பகலில் ஈரோடு மாநகர் பகுதியில் வழக்கம் போல் வெயில் அடித்தது. அதைத்தொடர்ந்து மாலையில் வானில் கரு மேகங்கள் திரண்டன. இரவு 6.40 மணிக்கு இடி -மின்னலுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று இரவு 10 மணி வரை பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறிக்கொண்டே இருந்தது.
இதனால் ஈரோடு பஸ் நிலையம், முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, பெரியவலசு, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என். ரோடு, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடியது. ஒரு சில இடங்களில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்ததால் மழை நீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியது.
மழை அளவு
மேலும் ஈரோடு காளை மாட்டு சிலை உள்பட நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. பலத்த மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர் மற்றும் சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நின்றதால் பயணிகள் நடந்து செல்ல கடும் அவதி அடைந்தனர். மழை காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அம்மாபேட்டை-61.6, பவானிசாகர் -55.4, பவானி -47, கோபி -31.8, கொடிவேரி -29, ஈரோடு -24, தாளவாடி -18.4, எலந்தைகுட்டைமேடு -15.8, சத்தியமங்கலம் -15, சென்னிமலை -15, மொடக்குறிச்சி -14.2, கவுந்தப்பாடி -12.4, குண்டேரிப்பள்ளம் -12, நம்பியூர் -12, வரட்டுப்பள்ளம் -9.8, பெருந்துறை -6, கொடுமுடி -4.
காவிரியில் வெள்ளப்பெருக்கு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் நேற்று மாலை வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை கதவணை கதவுகள் திறக்கப்படாததால் காவிரி ஆற்று தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று கட்டளை கதவணை கதவுகளை திறந்துவிட்டனர். அதன்பின்னரே நெரிஞ்சிப்பேட்டை ஊருக்குள் தண்ணீர் வடிய தொடங்கியது.