ஈரோட்டில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


ஈரோட்டில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x

ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு வந்தார். முன்னதாக கோவை விமானநிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக வந்தார். அவருக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபோல் அவர் வந்த வழி நெடுகிலும் முக்கிய சந்திப்புகளில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பி.பி.அக்ரகாரம் வந்த அவர், பேசுவதற்கு முன்பு கட்சி நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்தும், வீரவாள் அளித்தும் வரவேற்றனர். பின்னர் அவர் பொதுமக்களிடம் உற்சாகமாக பேசத்தொடங்கினார். அம்மா... நல்லா இருக்கீங்களா, அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், அம்மாக்கள், பாட்டிகள் என்று அழைத்த அவர், ரொம்ப நேரமா காத்து இருக்கீங்களா, 5 மணிக்கே கோவையில் இருந்து கிளம்பிட்டேன்... ஒரு மணி நேரத்தில் வந்திடலாம் என்றார்கள். ஆனால் வழி முழுவதும் வரவேற்பு காரணமாக காலதாமதம் ஆகிவிட்டது. கோவிச்சுக்காதீங்க... கோவிச்சுக்க மாட்டீங்க தானே என்று கொஞ்சும் தொனியில் அவர் பேசியபோது அனைவரும் உற்சாகம் அடைந்தனர். பேசி முடித்து புறப்பட்ட அவரிடம் தொண்டர்கள் 2 குழந்தைகளை கொடுத்து பெயர் சூட்டக்கேட்டுக்கொண்டனர். பின்னர் கருங்கல்பாளையம் காந்திசிலை, மரப்பாலம் பகுதிகளிலும் அவர் பொதுமக்களிடம் நன்றி தெரிவித்து பேசினார். அங்கிருந்து திருச்சி புறப்பட்டு சென்றார். அப்போது தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அமைச்சர் சு.முத்துசாமி ஒப்படைத்தார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன், திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஷஷாங் சாய் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


Next Story