ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை
ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
பலத்த காற்று
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் பெய்த கன மழையால் ஈரோடு மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டார்கள்.
இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணிநேரம் மட்டுமே மழை பெய்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், பலத்த காற்று காரணமாக மழையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் திணறினார்கள். அவர்கள் சாலையோரமாக ஒதுங்கி நின்றனர்.
தேங்கிய மழை நீர்
இந்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப்ரோடு), முனிசிபல்காலனி, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி வலசு, காளைமாட்டு சிலை, குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டார்கள்.
ஒருபுறம் சிறிய பாதிப்புகள் இருந்தாலும், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.