ஈரோட்டில் கரடு முரடாக கிடக்கும் கடைவீதி: வேதனையில் சாலையோர வியாபாரிகள்


ஈரோட்டில் கரடு முரடாக கிடக்கும் கடைவீதி: வேதனையில்  சாலையோர வியாபாரிகள்
x
தினத்தந்தி 20 Aug 2023 9:05 PM GMT (Updated: 21 Aug 2023 10:08 AM GMT)

ஈரோட்டில் கரடு முரடாக கிடக்கும் கடைவீதியால் சாலையோர வியாபாரிகள் வேதனையில் தவிக்கின்றனா்.

ஈரோடு

ஈரோடு மாநகரில் மிக மிக நெரிசலான ஒரு பகுதி என்றால் அது ஆர்.கே.வி. ரோடு பகுதிதான். நேதாஜி காய்கறி மார்க்கெட், மிகப்பெரிய வணிக நிறுவன கடைகள், பலசரக்கு மொத்த வியாபார கடைகள் உள்ளிட்ட முக்கிய வர்த்தக நிறுவனங்கள் இந்த பகுதியில் உள்ளன. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக கடைவீதி உள்ளது. ஆர்.கே.வி. ரோடு, நேதாஜி ரோடு, கிருஷ்ணாதியேட்டர் ரோடு, காவிரி ரோடு, கொங்கலம்மன்கோவில் வீதி, புதுமஜீத் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன்கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, ஸ்டேட் வங்கி ரோடு, திருமகன் ஈவெரா ரோடு (கச்சேரி வீதி) என அனைத்து வீதிகளும் நெரிசல் மிகுந்தே காணப்படும்.

கூட்ட நெரிசல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி காய்கறி மார்க்கெட் பகுதியில் புதிய கடைகள் கட்டும் பணிக்காக வ.உ.சி.பூங்கா மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் ஆர்.கே.வி. ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம், வாகன நெரிசல் என்று எதுவும் சிறிதும் குறையாமல் இருந்தது.

இதனால் சாலையோர வியாபாரிகள் பலரும் இந்த வீதிகளில் சிறிய அளவிலான வியாபாரங்கள் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தனர்.

கரடு முரடான ரோடுகள்

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக மழைநீர் வடிகால்கள் சீரமைக்கும் வகையில் பெரிய அளவிலான கால்வாய்கள் வெட்டப்பட்டன. ஏற்கனவே இருந்த சாக்கடை கால்வாயை ஒட்டி இந்த பணிகள் நடந்ததால் பணி செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. பணிகள் உடனடியாக நிறைவேற்றப்படாததால் கடைவீதி ரோடுகள் முழுவதும் கரடு முரடாக கிடக்கின்றன. ஆனால், பணிகள் மிக தொய்வாகவே நடந்து வருகிறது. 7 மாதங்களாக ஒரு அரசுத்துறையால் மிக முக்கியமான பகுதியில் கூட பணிகளை முடிக்க முடியாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால் பணிகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் நடைபெறும். ஆனால் தற்போது மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், சாலை விரிவாக்கம் பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத நிலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

சிக்கல்

இந்த சூழலில் ஒரு பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்கள் பணி முடிக்கப்பட்டு மூடப்படும் முன்பே, இன்னொரு இடத்தில் பெரிய பள்ளங்களை தோண்டி இன்னும் போக்குவரத்தை சிக்கலாக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு உள்ளது.

ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரை சத்தி ரோடு, ஈ.வி.என். ரோடு, காந்திஜி ரோடு, சென்னிமலை ரோடு, ஆர்.கே.வி. ரோடு, நேதாஜி ரோடு, உள்ளிட்ட சாலைகளில் ஒரே நேரத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன. இதனால் எந்த சாலையில் செல்வதாக இருந்தாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

போக்குவரத்து தடை

ஆர்.கே.வி. ரோடு கடைவீதி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது 2 சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் இருக்கிறது. ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்ட இடங்களில் பாதி அளவு கூட பணிகள் முடியாத நிலையில் நேற்று திருமகன் ஈவெரா ரோடு முதல் டவுன் போலீஸ் நிலையம் வரையான பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் நேதாஜி ரோட்டிலும் போக்குவரத்து முழுமையாக தடையாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது, விரைவில் பண்டிகை காலங்கள் தொடங்கும் நிலையில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் பணிகளால் இன்னும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ரோட்டில் பல வர்த்தக நிறுவனங்கள் வியாபாரத்தை நிறுத்தும் சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கஷ்டம்

இதுபற்றி ஆர்.கே.வி. ரோட்டில் பூ வியாபாரம் செய்து வரும் முத்துசாமி கூறும்போது, 'இந்த பகுதியில் வியாபாரம் சரியாக நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. பெயரளவுக்கு உட்கார்ந்து இருக்கிறோம். இங்கேயே பூக்கள் வாங்கி பழக்கப்பட்ட பலரும் வருகிறார்கள். ஆனால், வாகனங்கள் வர போதிய வசதி இல்லாததால் மிகவும் கஷ்டமாக உள்ளது. பணிகள் மிக மெதுவாக செய்துகொண்டிருக்கிறார்கள். விரைவாக பணியை முடித்தால் மட்டுமே எங்களைப்போன்ற சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்க முடியும்' என்றார்.

குறைவான வருமானம்

ஆட்டோ டிரைவர் எஸ்.அமீர்ஜான்:-

நான் கொங்கலம்மன் கோவில் ஆட்டோ நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். இந்த பகுதிக்கு வரும் மக்களை நம்பியே எங்கள் வாழ்க்கை உள்ளது. இங்கு 30 ஆட்டோக்கள் ஓடி வந்த நிலையில் கடந்த 6 மாதத்தில் 15-க்கும் குறைவாக மாறிவிட்டது. பிற ஆட்டோக்கள் ஓட்டம் இல்லாமல் வேறு பகுதிகளில் இருந்து இயக்கும் சூழல் உள்ளது. சொந்த ஆட்டோ இல்லாத டிரைவர்கள் தினசரி கண்டிப்பாக ஆட்டோ உரிமையாளருக்கு பணம் செலுத்த வேண்டும். அந்த தொகை கூட கிடைக்காத நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. முன்பு தினசரி ரூ.1,000-க்கும் அதிகமாக சம்பாதித்து வந்தோம். செலவுகள் போக குடும்பம் நடத்த போதியதாக இருந்தது. ஆனால் இப்போது மிகவும் குறைவான வருமானம் வருகிறது. ஒரு நாளைக்கு 5 சவாரி வருவதே பெரியவிஷயமாக உள்ளது. இந்த சாலையில் பணிகள் முழுமையாக முடிந்து போக்குவரத்து சீராகி, கடைகளுக்கு மக்கள் வந்தால் மட்டுமே எங்கள் தொழில் நன்றாக இருக்கும்.

விற்பனை பாதிப்பு

வெங்காயம் விற்பனை செய்யும் ஷாலினி:-

இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கடை வைத்து இருந்தோம். இங்கு சாக்கடை பள்ளம் தோண்டப்பட்டதால் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. பல மாதங்களாக பணிகள் முடியாமல் இருப்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார்கள். நாங்கள் வேறு இடம் இல்லாமல் இங்கேயே தள்ளு வண்டியில் வெங்காயம் விற்பனை செய்கிறோம். இங்கு வரும் அனைத்து ரோடுகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே விற்பனை பாதிக்கப்படுகிறது.


Next Story