ஈரோட்டில்வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு


ஈரோட்டில்வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு
x

ஈரோட்டில் வருகிற மே மாதம் 5-ந்தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு நடக்கிறது.

ஈரோடு

ஈரோட்டில் வருகிற மே மாதம் 5-ந்தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு நடக்கிறது.

மாநில மாநாடு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், 40-வது வணிகர் தின மாநில மாநாடு, வணிகர் தினமான மே மாதம் 5-ந் தேதி ஈரோட்டில் நடத்துவது என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் தலைமை தாங்கினார். மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன், மாநில துணைத்தலைவர் ஆர்.எம்.தேவராஜா, இணைச்செயலாளர்கள் என்.சிவநேசன், கே.ராஜகோபால், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், ஈரோடு மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம், திருப்பூர் மாவட்ட செயலாளர் லாலா டி.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ஆலோசனை

மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொங்கு மண்டலமான ஈரோட்டில் நடக்க இருக்கும் இந்த மாநாடு வணிகர்களுக்கு நிச்சயம் மாபெரும் திருப்பமாக அமையும் என்று பேசினார்.

கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும் பதிவு செய்தனர். மாநில மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வுகாணல், முன் ஏற்பாடுகள், மாநாட்டிற்கான சிறப்பு அழைப்பாளர்கள், மாநாட்டில் பங்கேற்க இருக்கும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழக வணிகர்களின் வருகை, உணவு, இருப்பிட வசதி பாதுகாப்பு பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

விடுமுறை

ஈரோட்டில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்களின் கடைகளுக்கு முழுமையாக விடுமுறை அளித்து குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக வணிகர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் ஜி.எஸ்.டி. வணிகவரி சட்டங்கள், உணவு பாதுகாப்பு துறை சட்டங்களில் உள்ள குளறுபடிகள், தொழிலாளர் நலச் சட்டங்களில் வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், புதிய உரிமம் பெறுதல் -உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் மத்திய -மாநில அரசுகளுக்கு வணிகர்களின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் மாநாடாகவும் இந்த மாநாடு அமைய வேண்டும். மேலும் மாநாட்டினை மிகப்பிரமாண்டமாக வணிகர்களின் நலம் காக்கும் மாநாடாக அமைத்திட வேண்டும் என கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

முடிவில் ஈரோடு மாவட்ட செயலாளர் பி.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story