ஈரோட்டில் பலத்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதி


ஈரோட்டில்  பலத்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்  கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதி
x

பொதுமக்கள் அவதி

ஈரோடு

ஈரோட்டில் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 4 மணிஅளவில் ஈரோடு பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. அதன்பிறகு பொய்த்துபோன மழை மீண்டும் 5.30 மணிஅளவில் பெய்ய தொடங்கியது. அப்போது பலத்த காற்றுடன் மழை கொட்டியது. பலத்த மழையாக பெய்ததால் நடந்து சென்றவர்களும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் நனையாமல் இருக்க ஆங்காங்கே ஒதுங்கி நின்றார்கள்.

சுமார் அரை மணிநேரம் மட்டுமே மழை பெய்தது. அதற்குள் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப்ரோடு) உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அங்கு சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றார்கள்.

சாக்கடையில் அடைப்பு

ஈரோடு பெருந்துறை ரோடு குமலன்குட்டையில் தாழ்வான பகுதியில் சாலையோரமாக மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா கச்சேரி வீதியில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தலைமை ஸ்டேட் வங்கி சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமேடை சற்று உயரமாக அமைக்கப்பட்டு உள்ளதால், ஈரோடு அமல அன்னை ஆலய வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற வழியில்லாமல் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது.

காளைமாட்டு சிலை பகுதியில் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நின்றது. ரெயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஈரோடு நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் நால்ரோடு பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆட்டோ நிறுத்தம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியது.

வடிகால் வசதி

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "ஈரோட்டில் சுமார் அரை மணிநேரம் மட்டுமே மழை பெய்தது. ஆனால் இந்த மழைக்கே ஈரோடு தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி நின்றது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இல்லாதபோது இருந்த நிலை தற்போது கவுன்சிலர்கள் இருந்தபோதும் அதேநிலை நீடிக்கிறது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே சாக்கடையை தூர்வாரவும், மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்", என்றார்.


Next Story