எட்டயபுரம் நகைக்கடையில் வெள்ளி பொருட்கள் திருடிய இறைச்சிகடை தொழிலாளி கைது
எட்டயபுரம் நகைக்கடையில் வெள்ளி பொருட்கள் திருடிய இறைச்சிகடை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் நகைக்கடையில் 7 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய வழக்கில் இறைச்சி கடை தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
நகைக்கடையில் திருட்டு
எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 38). இவர் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 14-ந் தேதி இரவு வியாபாரத்தை முடித்து ெகாண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். அன்று நள்ளிரவில் இவரது கடையை உடைத்த மர்மநபர்கள், உள்ளே இருந்து 7 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றார்.
இதுகுறித்து குறித்து அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இறைச்சி கடை தொழிலாளி
இதில், சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த இறைச்சி கடை தொழிலாளி அருணாச்சலம் ( 48) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர் நகைக்கடையில் வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார், இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.