கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில்ஆம்புலன்ஸ் டிரைவரை அரிவாளால் தாக்க முயன்ற டாக்டர்:சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில்ஆம்புலன்ஸ் டிரைவரை அரிவாளால் தாக்க முயன்ற டாக்டர்:சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:45 PM GMT)

கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை அரிவாளால் டாக்டர் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தேனி

கடமலைக்குண்டுவில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பரமகுரு என்பவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இதே மருத்துவமனையில் ராஜகோபால் (வயது 48) என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். கடந்த 10-ந் தேதி ராஜகோபால் பணிக்கு சிறிது நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வழக்கம் போல வருகை பதிவேட்டில் கையொப்பம் போடுவதற்காக டாக்டர் அறைக்கு சென்றார். அப்போது தாமதமாக வந்ததற்காக ராஜகோபாலை, பரமகுரு கண்டித்தார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பரமகுரு அருகில் இருந்த கம்பை எடுத்து ராஜகோபாலை தாக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். இதையடுத்து ராஜகோபால் அங்கு உள்ள மருந்தாளுனர் அறையில் சென்று அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் பரமகுரு கையில் அரிவாளுடன் வந்து ராஜகோபாலை தாக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த பணியாளர்கள் ராஜகோபாலை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் 10 நாட்களுக்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் டாக்டர் பரமகுரு மோட்டார் சைக்கிளில் வருவதும், பின்னர் அவர் அரிவாளை கையில் எடுத்துக்கொண்டு சுகாதார நிலையத்துக்குள் நுழைந்து ராஜகோபாலை தாக்க முயன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை மாவட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story