கடம்பூர்-குன்றி வனச்சாலையில்இரவு நேரத்தில் உலா வந்த புலிக்குட்டிகள்


கடம்பூர்-குன்றி வனச்சாலையில்இரவு நேரத்தில் உலா வந்த புலிக்குட்டிகள்
x
ஈரோடு

டி.என்.பாளையம்,

கடம்பூர்-குன்றி வனச்சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த புலிக்குட்டிகளை செல்போனில் பஸ் பயணிகள் படம் பிடித்தனர்.

வனவிலங்குகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் காணப்படுகின்றன.

தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் உள்ள ரோடுகளில் புலிகள் மற்றும் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும் நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர்.

புலிக்குட்டிகள்

இந்தநிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குன்றி சாலையில் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது.

அப்போது 2 புலிக்குட்டிகள் ரோட்டில் உலா வந்ததை பஸ் டிரைவர் கவனித்தார். உடனே சற்று தூரத்திலேயே பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து பஸ்சுக்குள் இருந்தவாறே ரோட்டில் நடந்து சென்ற புலிக்குட்டிகளை பார்த்து பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சிலர் செல்போனில் படம் பிடித்தனர்.

சில நிமிடத்தில் புலிக்குட்டிகள் தானாக காட்டுக்குள் சென்றுவிட்டன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Next Story