ஊட்டி அருகே காமராஜர் அணைப்பகுதியில்எருமையை அடித்துக் கொன்ற புலி
ஊட்டி அருகே காமராஜர் அணைப்பகுதியில் எருமையை, புலி அடித்துக் கொன்றது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், புலியை கூண்டு வைத்து பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி: ஊட்டி அருகே காமராஜர் அணைப்பகுதியில் எருமையை, புலி அடித்துக் கொன்றது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், புலியை கூண்டு வைத்து பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளது. சமீப நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக உலா வருகிறது. குறிப்பாக மஞ்சூர் பகுதியில் காட்டெருமைகளும், கூடலூர் பகுதியில் காட்டுயானைகளும், ஊட்டியில் புலி நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ஊட்டியில் இருந்து மைசூரு செல்லக்கூடிய சாலையில் உள்ள காமராஜர் சாகர் அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் தென்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த புலி, அங்கு இருந்த வளர்ப்பு எருமையை அடித்து கொன்று பாதி உடலை தின்றுள்ளது.
புதரில் ஓய்வெடுத்த புலி
பின்னர் அருகே உள்ள வனப்பகுதியின் புதருக்குள் கம்பீரமாக புலி அமர்ந்திருந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
மேலும் புலி தொடர்ந்து அந்தப்பகுதியில் உலா வருவதால் காமராஜர் சாகர் அணை சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.