ஓடும் பஸ்சை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி கண்டக்டரிடம் பணப்பை பறிப்பு
ஓடும் பஸ்சை வழிமறித்து நிறுத்தி கத்தி முனையில் மிரட்டி கண்டக்டரிடம் பணப்பையை பறித்து விட்டு தப்பிய 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓடும் பஸ்சை வழிமறித்து நிறுத்தி கத்தி முனையில் மிரட்டி கண்டக்டரிடம் பணப்பையை பறித்து விட்டு தப்பிய 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பஸ்சை வழிமறித்து..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் ஒன்று சிவகங்கையை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை இலுப்பக்குடியை சேர்ந்த டிரைவர் ஈஸ்வரன் (வயது 38) ஓட்டினார். துவரங்குறிச்சியை அடுத்துள்ள அதிகாரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (45) கண்டக்டராக இருந்தார்.
இந்த பஸ்சில் ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் மட்டுமே பயணித்தனர். இரவு 9 மணி அளவில் வீரவலசை அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், முகக்கவசம் அணிந்தபடி திடீரென்று பஸ்சின் முன் சென்று வழிமறித்து பஸ்சை நிறுத்தினர்.
பணப்பை பறிப்பு
உடனே அந்த 2 பேரும் கையில் அரிவாள், கத்தியுடன் பஸ்சில் ஏறினர். ஆயுதங்களை காண்பித்து மிரட்டி கண்டக்டரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு, அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் டிரைவர், கண்டக்டர், பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் ரொக்கம் ரூ1,500 மற்றும் ரூ.27 ஆயிரத்துக்கான பஸ் டிக்கெட்டுகள் இருந்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டிரைவர் ஈஸ்வரன் பஸ்சை ஓட்டி வந்து சிவகங்கை பைபாஸ் சாலை அருகே உள்ள போலீஸ் சோதனைசாவடிக்கு கொண்டு வந்தார். அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த போலீசார் மைக்கில் தெரிவித்து, மற்ற இடங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
போலீசார் தீவிர விசாரணை
பூவந்தி, சிவகங்கை போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 2 வாலிபர்களை தேடினார்கள். விரைவில் அவர்களை பிடிப்போம் என தெரிவித்தனர். கொள்ளையர்கள் தப்பிய இடத்தில் பஸ் டிக்கெட் மற்றும் சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று பஸ் கண்டக்டர், டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் உரிய பாதுகாப்பு இல்லை என்றால் பஸ்சை இயக்கமாட்டோம் எனவும் கோஷமிட்டனர்.