கொல்லிமலை நீர்வீழ்ச்சியில்மயங்கி விழுந்து வாலிபர் சாவு
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் மயங்கி விழுந்து சேலத்தை சேர்ந்த வாலிபர் இறந்தார்.
சேந்தமங்கலம்
மயங்கி விழுந்தார்
சேலம் சீலநாயக்கன்பட்டி இ.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ் காந்த் (வயது 21). இவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலைக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர் நேற்று முன்தினம் மதியம் அங்குள்ள புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றார்.
அப்போது நுழைவுவாயில் பகுதியில் இருந்து சுமார் 500 படிக்கட்டுகளை அவர் நடந்து சென்றார். அப்போது திடீரென்று நிதிஷ்காந்த் மயங்கி விழுந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்ற மற்ற சுற்றுலா பயணிகள் கொல்லிமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து நிதிஷ் காந்தை மீட்டு செம்பேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சாவு
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நிதிஷ்காந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாழவந்தி நாடு போலீசார் நிதிஷ் காந்த் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.