கோவில்பட்டியில், வெள்ளிக்கிழமைதமிழ் கனவு நிகழ்ச்சி
கோவில்பட்டியில், வெள்ளிக்கிழமை தமிழ் கனவு நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் மாபெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகளை மாவட்டம் தோறும் நடத்துவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி முதல் கட்டமாக தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு பெருமிதச்செல்வன் மற்றும் பெருமிதச்செல்வி ஆகிய விருதுகளும், சொற்பொழிவுக்கு பிறகு கேள்வி எழுப்பும் மாணவ, மாணவிகளுக்கு கேள்வி நாயகன், கேள்வி நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.
தற்போது 2-வது கட்டமாக கோவில்பட்டியில் தமிழ் கனவு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் கலைவாணர் என்.எஸ்.கே. நகைச்சுவையில் சமூகநீதி" என்ற தலைப்பில் அருணன், 'உயிர்களின் தமிழ்"; என்ற தலைப்பில் அறிவுமதி ஆகியோர் பேசுகின்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்று, தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும் அறிந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.