மருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்


மருதமலை முருகன் கோவிலில்  கார்த்திகை மகா தீபம் ஏற்றம்
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:45 PM GMT)

கோவை மருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவை மருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவை மருதமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. மருதமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.

இந்த ஆண்டு கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று 6 அதிகாலை மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தார். 12 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

கார்த்திகை தீபம் ஏற்றம்

அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மீண்டும் தங்கமயில் வாகனத்தில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வந்தார். மாலை 6 மணிக்கு ஆதிமூலம் ஸ்தானம், பஞ்சமுக விநாயகர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், ராஜகோபுரம், வரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர், நவகிரகம், இடும்பன் சுவாமி, பாம்பாட்டி சித்தர் ஆகிய சன்னதிகளில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீப கம்பத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... மருதமலை முருகனுக்கு அரோகரா... என்று பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து கோவில் முன்புறம் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தங்கரதத்தில் வலம்

பின்னர் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் தங்கரதத்தில் வலம் வந்தார். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மலை மேல் செல்ல 2 சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் மினிபஸ்களில் மலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தீப திருவிழாவையொட்டி வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தர்மலிங்கேஸ்வரர் கோவில்

இதேபோல கோவை குனியமுத்தூரை அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடாந்து இன்று (புதன்கிழமை) 2-வது நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) 3-வது நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மலை உச்சியில் தீபம் எரிவதற்காக பக்தர்கள் பசு நெய்யை கோவிலுக்கு வழங்கி வருகின்றனர்.


Next Story