மீனாட்சி அம்மன் கோவிலில்ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்- 25-ந் தேதி சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது


.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆவணி மூல திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

சிறப்பு வாய்ந்த ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி சுவாமி சன்னதியில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது. அங்கு மீனாட்சி- சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன்படி விழாவில் நேற்று முதல் 18-ந் தேதி வரை கோவிலுக்குள் 2-ம் பிரகாரத்தில் சந்திரசேகர் சுவாமி வீதி உலா நடைபெறும்.

சுவாமிக்கு பட்டாபிஷேகம்

இதைதொடர்ந்து திருவிளையாடல் நடைபெறும் முக்கிய விழாக்கள் 19-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. அதில் 19-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 20-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 21-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 22-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 23-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 24-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.

25-ந் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 26-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 27-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 28-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 29-ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 30-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story