தேனி அருகே முத்துதேவன்பட்டியில் முஸ்லிம் பயிற்சி பள்ளிக்கு 'சீல்' வைப்பு
தேனி அருகே முத்துதேவன்பட்டியில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டி முஸ்லிம் பயிற்சி பள்ளிக்கு வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்பு
தேனி அருகே முத்துதேவன்பட்டியில் அறிவகம் என்ற பெயரில் முஸ்லிம் மத பயிற்சி பள்ளி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 22-ந்தேதி நாட்டின் பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்போடு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்படி, முத்துதேவன்பட்டி அறிவகத்திலும் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதோடு தொடர்புடைய அமைப்புகளை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது. அந்த தடையை தொடர்ந்து இந்த அமைப்போடு தொடர்புடைய அலுவலகங்கள், நிறுவனங்கள் 'சீல்' வைக்கப்பட்டு வருகிறது.
'சீல்' வைப்பு
அதன்படி, முத்துதேவன்பட்டி அறிவகம் முஸ்லிம் பயிற்சி பள்ளிக்கு 'சீல்' வைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறி தேனி தாசில்தார் சரவணபாபு தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர். அவர்கள் அந்த கட்டிடத்துக்குள் சென்று பார்வையிட்டனர். அங்கு இருந்த மாணவிகளை வெளியேற்றினர்.
பின்னர் அந்த கட்டிடத்தை இழுத்து மூடி, 'சீல்' வைத்தனர். 'சீல்' வைத்தபிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதற்காக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
ஜமாத் நிர்வாகிகள் மனு
இந்நிலையில், முத்துதேவன்பட்டி ஜமாத் தலைவர் மஸ்தான் தலைமையில் நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "முத்துதேவன்பட்டியில் இயங்கி வரும் அறிவகம் பள்ளிக்கூடம் என்பது தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேஷன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது.
என்.ஐ.ஏ. அறிவித்த இயக்கங்களுக்கு கட்டுப்பட்டது அல்ல. இது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் அல்ல. இது தனி நிறுவனம். என்.ஐ.ஏ. கீழ் உள்ள ஆணையில் இந்த அலுவலகம் குறிப்பிடப்படவும் இல்லை. எனவே 'சீல்' வைத்து அடைப்பது சட்டப்படி நியாயம் இல்லை. இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.