நாகையில், மோடியின் உருவப்பொம்மை எரிப்பு


நாகையில், மோடியின் உருவப்பொம்மை எரிப்பு
x

நாகையில், மோடியின் உருவப்பொம்மை எரிப்பு

நாகப்பட்டினம்

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நாகையில் மோடியின் உருவப்பொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை

பிரதமர் மோடி குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தவறாக பேசியதாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் அமிர்தராஜா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடியின் உருவப்பொம்மை எரிப்பு

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான போலீசார், அதனை தடுத்து தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

10 பேர் கைது

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று அங்கிருந்து அகற்றினர். பின்னர் தடையை மீறி பிரதமர் மோடியின் உருவப்பொம்மையை எரித்ததாக, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்த ராஜா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story