ஒரத்தூரில் ஏரிக்கரை உடைந்து வீணாகும் தண்ணீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ஒரத்தூரில் ஏரிக்கரை உடைந்து வீணாகும் தண்ணீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

ஒரத்தூரில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்

ஏரிக்கரை உடைந்தது

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் அடையாற்றின் கிளை நதியான ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 3 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக முடிவடையாமல் உள்ளது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் நீர்த்தேக்கம் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்த்தேக்கம் அருகே உள்ள ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது.

கடந்த ஆண்டும் உடைந்தது

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே பகுதியில் ஏரிக்கரை உடைந்து ஏரி நீர் முழுவதும் வீணாக விளை நிலங்கள் பகுதியில் வெளியேறியது. அப்போது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சரி செய்தனர். இந்த ஆண்டும் தற்போது பெய்த மழையில் மீண்டும் அதே பகுதியில் ஏரிக்கரை உடைந்து மழைநீர் வெளியேறி வருகிறது.

கடந்த 7 மாதங்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கரை உள்ள பகுதியில் ஆய்வு செய்து கரையை பலப்படுத்தி இருந்தால் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி இருக்காது.

சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது

ஆண்டுதோறும் மழை பெய்து கரை உடைந்தவுடன் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியும் சரி செய்யும் பணியும் நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அரசு பணம்தான் வீண். மேலும் கரையை கடந்த ஆண்டு முறையாக பலப்படுத்தியிருந்தால் ஏன் தற்போது உடைகிறது.

குறிப்பிட்ட இடத்திலேயே இரவு நேரங்களில் கரை உடைவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story