நெல் கொள்முதல் நிலையங்களில், அதிகாரிகள் ஆய்வு
திருமருகல் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில், அதிகாரிகள் ஆய்வு
திட்டச்சேரி:
திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை பிரிவு சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில், நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருமருகல், ஏர்வாடி, அம்பல், பொறக்குடி ஆகிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மயிலாடுதுறை சரகம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது விவசாயிகளிடம் முறையாக நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் வாங்கப்படுகிறதா, எடை அளவு சரியாக உள்ளதா என்று அங்கு வந்த விவசாயிகளிடம் நாகை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை பிரிவு போலீசார் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பணியில் இருந்த கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் இதுவரை எத்தனை விவசாயிகளிடம் எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. எத்தனை விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்களை விற்பனை செய்துள்ளனர். கொள்முதலுக்கு தேவையான சாக்குகள் மற்றும் சணல் உள்ளிட்டவை இருப்பு உள்ளதா என்பன உள்ளிட்ட விபரங்களையும் கேட்டறிந்தனர்.