புதுக்கோட்டையில் ஆட்டுச்சந்தை களை கட்டியது


புதுக்கோட்டையில் ஆட்டுச்சந்தை களை கட்டியது
x
தினத்தந்தி 21 Oct 2022 6:49 PM GMT (Updated: 21 Oct 2022 6:51 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் ஆட்டுச் சந்தை களை கட்டியது. லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

புதுக்கோட்டை

ஆட்டுச்சந்தை

புதுக்கோட்டை சந்தைபேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வது உண்டு. இதேபோல் ஆடு வளர்ப்போரும் வந்து ஆடுகளை விற்பனை செய்வார்கள். இதில் பண்டிகை காலங்களில் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டும்.

இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை சந்தைபேட்டையில் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களை கட்டியது. ஆடுகளை விற்பனைக்காக ஏராளமானோர் கொண்டு வந்திருந்தனர். இதேபோல் வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் ஆட்டுச்சந்தையில் கூட்டம் அலைமோதியது.

லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை

தீபாவளி பண்டிகை அன்று அசைவ உணவு பிரியர்கள் ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதனால் வியாபாரிகள் கடைகளில் ஆட்டிறைச்சி விற்பனைக்காக மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என ஆட்டின் வகைக்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது.

இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.


Next Story