தாளவாடி அருகே புளிஞ்சூர் சோதனைச்சாவடியில்கன்னட அரசியல் கட்சியினர் சாலை மறியல்; 10 பேர் கைது
தாளவாடி அருகே புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் கன்னட அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா் இதில்; 10 பேர் கைது செய்யப்பட்டனா்.
தாளவாடி அருகே உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அரசியல் கட்சியினர் 10 பேரை கர்நாடக போலீசார் கைதுசெய்தனர். இதனால் தமிழகம்-கர்நாடகம் இடையே சுமார் 4½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முழு அடைப்பு
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கர்நாடக மாநில எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலமான மைசூரு, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு நேற்று முன்தினம் பஸ்கள் இயக்கப்படவில்லை. தாளவாடி வரை மட்டுமே இயக்கப்பட்டன. அந்த பஸ்களும் தலமலை வழியாக தாளவாடிக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்பட்டது. முழு அடைப்பு முடிவடைந்ததை தொடர்ந்து பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
போராட்டம் அறிவிப்பு
இந்த நிலையில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் தாளவாடி அருகே உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் நேற்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட ஜே.டி.எஸ். கட்சி செயலாளர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லக்கூடிய தமிழ்நாடு பதிவுகள் கொண்ட அனைத்து வாகனங்களும் பண்ணாரி சோதனைச்சாவடியில் காலை 9 மணிக்கு நிறுத்தப்பட்டன.
சாலை மறியல்
தலமலை வழியாக தாளவாடி செல்லும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. மேலும் மைசூருக்கு செல்லக்கூடிய பஸ், கார், வேன்களும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். அதேபோல் கர்நாடகாவில் இருந்தும் எந்த வாகனங்களும் தமிழகத்துக்கு வரவில்லை.
இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்ட ஜே.டி.எஸ். கட்சி செய்லாளர் அள்ளூர் மல்லு தலைமையில் சுமார் 10 பேர் மதியம் 1.15 மணி அளவில் புளிஞ்சூர் சோதனைச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்தும், தமிழக- கர்நாடக அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கர்நாடக மாநில போலீசார் 10 பேரை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து பண்ணாரி சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. அதேபோல் அங்கிருந்தும் வாகனங்கள் வழக்கம்போல் தமிழகம் வர தொடங்கின.
மாநில எல்லையில் சாலை மறியல் போராட்டம் காரணமாக தமிழகம்-கர்நாடகம் இடையே சுமார் 4½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.