சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

ஆடி அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர்.

திருச்சி

ஆடி அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர்.

மாரியம்மன்

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், தொழில் அபிவிருத்தி அடையும், குடும்பம் செழிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இதன் காரணமாக, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

விளக்கேற்றி வழிபாடு

இந்நிலையில், நேற்று ஆடி அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சமயபுரம் கோவிலுக்கு வருகை தந்தனர். இதில் பல பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்தும் கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து, பக்தர்கள் வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதேபோல் இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில், சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பக்தர்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி அறிவுறுத்தலின்படி கோவில் காவலர்கள், பணியாளர்கள் சக்கர நாற்காலியில் அமர வைத்து தனியாக அழைத்துச் சென்று அம்மனை வழிபட செய்தனர்.


Next Story