செய்துங்கநல்லூரில்சாலையோர பள்ளத்தில்கார் கவிழ்ந்து வாலிபர் பலி


தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

செய்துங்கநல்லூரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு...

நெல்லை டவுனை சேர்ந்தவர் குரு கணேஷ். இவரும், நண்பர்கள் 5 பேரும் விடுமுறை தினம் என்பதால் அவரது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு மீண்டும் திருச்செந்தூரில் இருந்து காரில் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காரை குருகணேஷ் ஓட்டி வந்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குருகணேஷ், டவுண் ரெங்கநாதபுரம் கண்ணன் மகன் கந்தசாமி(வயது 28), சுடலைமணி, முத்துகுமார், மனோஜ் குமார், ஹரிஹரன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

ஒருவர் சாவு

ரத்தவெள்ளத்தில் கிடந்த அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாகச் சென்றவர்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.

பின்னர் 6 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

5 பேர் படுகாயம்

மற்ற 5 பேருக்கும் சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 5 பேரும் மயக்க நிலையில் இருப்பதால், அவர்களை பற்றிய முழுவிபரமும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


Next Story