கோவை சுகுணாபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது- பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
கோவை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக உடற் கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக உடற் கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் தொந்தரவு
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் விநாயகர் கோவில் வீதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 10-ம் வகுப்புவரை உள்ள இந்த பள்ளியில் 600 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் உடற் கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (வயது56). இவர் கடந்த வாரம்தான் வால்பாறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவர், அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை தொட்டு பேசுவது, அழகாக இருக்கிறாய் என்று ஜாடையாக பேசுவது போன்ற சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் கழிவறைக்கு சென்றால் கழிவறையின் கதவை மூடுவது மற்றும் மாணவிகளின் செல்போன் எண்ணை கொடுக்குமாறு கேட்பது உள்ளிட்ட பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பெற்றோர் முற்றுகை
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக உடற்கல்வி ஆசிரியரின், இந்த செயல் அதிகரித்து வந்துள்ளது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் சிலர், அந்த பள்ளி தலைமை ஆசிரியை பிரபாவிடம் முறையிட்டுள்ளனர். இதனை கேள்விப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன், இந்த விஷயம் பற்றி பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்று மாணவிகளிடம் சத்தியம் செய்யுமாறு கூறி உள்ளார்.
இதனால் பல மாணவிகள் பெற்றோரிடம் கூறாமல் அச்சத்துடன் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட சில மாணவிகளின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.நேரம் செல்ல,செல்ல மற்ற மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் அந்த பள்ளி முன்பு குவிந்து, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன், உதவி கமிஷனர் ரகுபதி ராஜா, கோட்டாட்சியர் இளங்கோவன், பேரூர் பகுதி உதவி கல்வி அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிரபாகரனை டிஸ்மிஸ் செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்றும், தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை பிரபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தினர். இதற்கிடையில் முற்றுகை போராட்டம் நடப்பதை அறிந்த பிரபாகரன் நேற்று பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துகொண்டார்.
கலெக்டர் உத்தரவு
இந்த பிரச்சினை உடனே கலெக்டர் சமீரன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவை அனைத்து மகளிர் மேற்கு பகுதி போலீசார் பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு ஆசிரியர் பிரபாகரன் மீது எடுக்கப்பட்டுள்ள கடும் நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது பெற்றோர், இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்க கூடாது என்று கூறியபடி கலைந்து சென்றனர். இதற்கிடையில் பள்ளி அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பிரபா, தகவல் தெரிந்தும் போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறார் என்றார்.