ஈரோட்டில் உள்ள பேக்கரியில் முட்டை பப்ஸ், கேக் சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை


ஈரோட்டில் உள்ள பேக்கரியில்  முட்டை பப்ஸ், கேக் சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 19 Oct 2023 2:29 AM IST (Updated: 19 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உள்ள பேக்கரியில் முட்டை பப்ஸ், கேக் சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட பேக்காியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

ஈரோடு

ஈரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் சாப்பிட்ட தாய்-மகள் உள்பட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேக்கரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வாந்தி -மயக்கம்

ஈரோடு அருகே உள்ள நசியனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி தாமரைச்செல்வி (வயது 30). இவர்களுடைய மகள் தக்ஷினி (4). நேற்று முன்தினம் தாமரைச்செல்வி தனது மகள் மற்றும் உறவினர் சிவகாமி (30) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக ஈரோடு வந்தார். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே தாமரைச்செல்வி, சிவகாமி, தக்ஷினி ஆகிய 3 பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கினர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சோதனைஇந்த நிலையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தங்கவிக்னேஷ் உத்தரவின் பேரில், நசியனூர் உணவு பாதுகாப்பு அதிகாரி அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு நேற்று காலை சென்று சோதனை நடத்தினர். பின்னர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பப்ஸ், கேக் உள்ளிட்ட உணவு பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டனர். மேலும் மறு அனுமதி வரும் வரை வேறு எந்த உணவு பொருட்களையும் தயாரிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விவரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். உணவு பொருட்களின் பரிசோதனை முடிவு வந்தவுடன் அதன் அடிப்படையில் பேக்கரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story