அக்டோபர் மாதம் இறுதியில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்குதண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

அக்டோபர் மாதம் இறுதியில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்
அக்டோபர் மாதம் இறுதியில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் திறப்பு
கோபி அருகே கரட்டடிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொடிவேரி அணை, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சபை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சுபி தளபதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பவானிசாகர் அணையில் போதிய நீர் இல்லாத நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கீழ்பவானி பாசனத்துக்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. எனவே தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வழக்கமாக அக்டோபர் மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதற்கு பதிலாக கீழ்பவானி பாசன விவசாயிகள் நிலைமையை கருத்தில் கொண்டு அக்டோபர் மாதம் இறுதியில் தண்ணீர் வழங்க அரசை கேட்டுக்கொள்வது.
மாசு ஏற்படுத்தும் ஆலைகள்
மாநில நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பவானி ஆற்றுக்கு மாசு ஏற்படுத்தும் ஆலைகளை அனுமதிக்க கூடாது. விவசாயிகள் என்ற பெயரில் இயங்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஆலைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிப்பதோடு, சாலை வழி அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும்.
சுத்திகரிக்க வேண்டும்
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 8 ஊராட்சி கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், சாய தொழிற்சாலை கழிவுகள் நேரிடையாக பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் பவானி ஆற்று பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கழிவு நீர் கலப்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுப்பதோடு, நிலமும் மாசு அடைந்து உள்ளது. இதனால் அரசு நகராட்சி கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.