தூத்துக்குடி சிவன் கோவில் வாசலில்ஊழியர்கள் தர்ணா போராட்டம்


தூத்துக்குடி சிவன் கோவில் வாசலில்ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சிவன் கோவில் வாசலில் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிவன் கோவில் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோவில் ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில் ஊழியர் மீது தாக்குதல்

தூத்துக்குடி சிவன் கோவில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்த போது, அங்கு வந்த தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் திருமண சான்று தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரேம்குமார், சுப்பையாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து சிவன் கோவில் ஊழியர்கள் நேற்று கோவில் வாசலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், கோவில் ஊழியர் சுப்பையாவை தாக்கிய நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி ஜாமீனில் விட்டுவிட்டதாக அறிகிறோம். எனவே, அவரால் கோவில் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, நாங்கள் நிம்மதியாக பணி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

1 More update

Next Story