கம்பம் உழவர் சந்தையில்ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
கம்பம் உழவர் சந்தையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கம்பத்தில் காந்திஜி பூங்காவை ஒட்டி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிகள் வாங்குவதற்காக கம்பம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இதனால் காலை நேரத்தில் உழவர் சந்தையை சுற்றியுள்ள பார்க் ரோடு, காந்திஜி வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு பகுதிகள் பரபரப்பாக காணப்படும். மேலும் இந்த பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்துள்ளனர்.
குறிப்பாக உழவர் சந்தையில் மேற்கு வாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் மட்டுமின்றி, உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் காலையில் பள்ளி வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உழவர் சந்தைக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.