வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்


தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:45 PM GMT)

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூச்சொரிதல் விழா

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் 47-வது ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர், மு.தூரி செல்வ நாயகபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டு கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பூக்குழி இறங்கிய பக்தர்கள்

நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் பறவை காவடி, வேல் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.

பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.

சாமி தரிசனம்

இதில் முதுகுளத்தூர் துணை சூப்பிரண்டு சின்ன கண்ணு, தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை பூச்சொரிதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. பின்னர் அம்மன் பூப்பல்லக்கில் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை முதுகுளத்தூர், மு.தூரி செல்வநாயகபுரம் ஆகிய கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி ஆகிய பகுதியில் இருந்து 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.


Next Story