மணல் குவாரியில், அமலாக்கத்துறையினர்2-வது நாளாக சோதனை


மணல் குவாரியில், அமலாக்கத்துறையினர்2-வது நாளாக சோதனை
x

அய்யம்பேட்டை அருகே மணல்குவாரியில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்தனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை,

அய்யம்பேட்டை அருகே மணல்குவாரியில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்தனர்.

அமலாக்கத்துறை சோதனை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றின் மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் தஞ்சை மாவட்டத்தில் பல குழுக்களாக பிரிந்து சென்று கொள்ளிடம் ஆற்றின் மணல் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர், கான்பூர் ஐ.ஐ.டி. குழுவினர் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

விதிகள் மீறப்பட்டதா?

மணல் அள்ளிய பகுதியில் பெரிய வகை டிரோனை பறக்க விட்டு படம் பிடித்தனர். இந்தநிலையில் நேற்றும் அமலாக்கத்துறையினர் பட்டுக்குடி அரசு மணல் குவாரியில் ஆய்வு நடத்தினர். நேற்று காலை ஒரு வேன், 2 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், டிரோன் இயக்கும் தொழில் நுட்ப வல்லுனர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் பட்டுக்குடி மணல் குவாரிக்கு வந்தனர்.அந்த குவாரியில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டுள்ளதா? என டிஜிட்டல் மீட்டர் மூலம் அளவீடு செய்தனர்.

நடந்து சென்றனர்

மேலும் அரசு நிர்ணயித்த ஆழத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்பதை சிறிய வகை டிரோன் கேமரா கொண்டு படம் எடுத்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளில் சிலர் கொள்ளிடம் ஆற்றில் பட்டுக்குடியிலிருந்து புத்தூர் வரை சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று மணல் அள்ளிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புத்தூர் பகுதியிலும் டிரோனை பறக்கவிட்டு படம் எடுத்தனர். சுமார் 5 மணி நேரம் மணல் குவாரியில் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story