கோவில் திருவிழாவில்போலீசார் முன்பு கோஷ்டி மோதல்:சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


கோவில் திருவிழாவில்போலீசார் முன்பு கோஷ்டி மோதல்:சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே கோவில் திருவிழாவில் போலீசார் முன்பு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேனி

வீரபாண்டி அருகே கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக கோவிலில் திரளான பக்தா்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தேரோட்டம் முடிந்த பிறகு அம்மனை தரிசனம் செய்து விட்டு இரவு நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினம் மற்றும் சர்க்கஸ் ஆகியவற்றை கண்டு களித்து கொண்டிருந்தனர். விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் அங்கு இருந்தனர்.

இந்நிலையில் ராட்டினங்கள் அமைக்கப்பட்ட வளாகத்தில் திரண்டு நின்ற பொதுமக்கள் கூட்டத்தில் சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் அங்கு இருந்த நாற்காலிகள், கம்புகளை எடுத்து தாக்கி கொண்டனர். இதைக்கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே இந்த கோஷ்டி மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் முன்பு கோஷ்டி மோதல் நடந்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story