உலக அமைதி கோபுரத்தில் 4 புத்தர் சிலைகள் அமைப்பு


உலக அமைதி கோபுரத்தில் 4 புத்தர் சிலைகள் அமைப்பு
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரத்தில் 4 புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா என்பவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2000-ம் ஆண்டு புத்தர் கோவில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு நிப்போசன் மியொ ஹொஜி மற்றும் புத்த பிட்சுகள், புத்த பிக்குனீகள் சார்பில் கோவில் கட்டப்பட்டது. தென்னிந்தியாவில் முதல் முறையாக வீரிருப்பு கிராமம் அருகே 120 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள உலக அமைதி கோபுரத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் 4-ந் தேதி கோபுர உச்சியில் புத்தரின் அஸ்தி வைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது.

அதனை தொடர்ந்து தற்போது அங்கு 4 புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தெற்கு திசையில் ஞானம் போதிப்பது போன்ற புத்தர் சிலையும், மேற்கு திசையில் சயன கோலத்தில் இருக்கும் புத்தர் சிலையும், வடக்கு திசையில் குழந்தை பருவத்தில் உள்ள புத்தர் சிலையும், கிழக்கு திசையில் மக்களுக்கு அருளாசி வழங்குவது போன்ற புத்தர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

புத்த பிக்கு இஸ்தானிஜி புத்த பிக்குனிகள் லீலாவதி, கிமூரா தலைமையில் இலங்கை, ஜப்பான், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புத்த துறவிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் புத்தரை வழிபட்டுச் சென்றனர்.

நிகழ்ச்சியில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி, தனுஷ் குமார் எம்.பி., தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கனகம்மாள் மற்றும் பிரஜா பிரம்ம குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஓம் சக்தி வழிபாட்டு குழுவினர், கிறிஸ்தவ அமைப்பினர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சர்வ சமய பிரார்த்தனை நடத்தினர்.


Next Story