தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக குவியும் புகார்கள்
தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான புகார்கள் குவிகின்றன. மோசடி குறுஞ்செய்திகளை நம்பி பலர் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடன் செயலிகளின் மூலம் கடன் வாங்கி பாதிக்கப்பட்ட பலரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற கடன் செயலிகளின் மூலம் அவசர தேவைக்கு கடன் வாங்கும் நபர்களின் செல்போனை ஹேக் செய்து அவர்களின் புகைப்படம், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. இதனால் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலும் கடன் செயலி, வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான புகார்களும் குவிந்து வருகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகியிடம் கேட்டபோது, "செல்போனுக்கு வேலைவாய்ப்பு, பரிசுப் பொருட்கள் தொடர்பாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டும்.
இதுபோன்ற குறுஞ்செய்திகளில் கொடுக்கப்படும் இணையதள இணைப்புகளையும் திறந்து பார்க்க வேண்டாம். வேலைவாய்ப்பு தொடர்பான இணையவழி மோசடியில் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். அவர்களின் புகார்கள் மீது தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே மோசடி நபர்களின் வலையில் சிக்கி யாரும் பணத்தை இழக்க வேண்டாம்" என்றார்.