திருச்செந்தூர் பஸ் நிலையத்தில்பக்தர்களிடம் நகை-செல்போன் பறிப்பு


திருச்செந்தூர் பஸ் நிலையத்தில்பக்தர்களிடம் நகை-செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் நகை-செல்போன் பறிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

குலசேகரன்பட்டினத்துக்கு சென்று ஊர் திரும்பிய பக்தர்களிடம் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் நகை, செல்போன்களை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தசரா திருவிழா

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலையில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன், வேடமணிந்த பக்தர்கள் காப்புகளை களைந்து விரதத்தை முடித்தனர். தொடர்ந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

இதனால் குலசேகரன்பட்டினம் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

பெண்ணிடம் நகை பறிப்பு

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் தேவர்குளத்தைச் சேர்ந்த கலா (வயது 38) என்ற பெண் தனது குடும்பத்தினருடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் மாலையில் தங்களது ஊருக்கு திரும்பி செல்வதற்காக, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்துக்கு வந்து, நெல்லை செல்லும் தனியார் பஸ்சில் ஏறினர்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கலா அணிந்து இருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் நைசாக பறித்து சென்றார். சிறிதுநேரத்தில் கலா தனது நகை திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதுகுறித்து அவர், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பக்தர்களிடம் செல்போன் அபேஸ்

இதேபோன்று திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, நகைக்கடை ஊழியர் கண்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் செல்போன்களை மர்மநபர்கள் நைசாக அபேஸ் செய்தனர்.

இதுகுறித்த புகார்களின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, பக்தர்களிடம் நகை, செல்போன்களை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்செந்தூரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் நகை, செல்போன்களை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story