திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்2ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தலா ரூ.50 ஆயிரம் செலவில் 2 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் நடந்தது.
இலவச திருமணம்
தமிழக அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் தலா ரூ.50 ஆயிரம் செலவில் மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பில் 2 ஜோடி மணமக்களுக்கு திருமணம் நடந்தது.
முதலாவதாக திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சசிக்குமார் மகன் வசந்த் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த பட்டுத்துரை மகள் அபிதா (21) ஆகியோருக்கு திருமணம் நடந்தது. பின்னர், உடன்குடி வடக்கு காலான்குடியிருப்பை சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்துசிவன் (30), தண்டுபத்து வீரவாகுபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெயசிங் நாடார் மகள் சூர்யா (21) ஆகியோருக்கு திருமணம் நடந்தது.
சீர்வரிசை
இந்த திருமண நிகழ்ச்சிகளுக்கு கோவில் இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி கலந்து கொண்டு, 4 கிராம் தங்க தாலி எடுத்து கொடுத்து மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இணை ஆணையர் அலுவலகத்தில் சீர்வரிசையாக திருமணமான மணமக்களுக்கு தனித்தனியாக பீரோ, கட்டில், தலையணை, பாய், கைக் கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் திருமண விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினருக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இந்த திருமண நிகழ்ச்சியில், கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் சிவநாதன், கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், ராமமூர்த்தி, கணேச வைத்தியநாதன், ரவிந்திரன், கோமதி மற்றும் மணமக்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.