திருவொற்றியூரில் பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளை; 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்


திருவொற்றியூரில் பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளை; 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
x

பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்ட 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 5 போலீசார் இரவு நேரத்தில் பணி முடிந்ததும் திருவொற்றியூர் கணக்கர் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது அவர்கள், பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்த ஊழியர்களை, போலீஸ்காரர்கள் மிரட்டியதாகவும் தெரிகிறது. மேலும் ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரை வழி விட மறுத்து தாக்கியதாகவும், அப்போது போலீசார் அனைவரும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் ஓட்டலில் போலீஸ்காரர்கள் ரகளை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளரும் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸ் ஏட்டு கோட்டமுத்து, போலீஸ்காரர் தனசேகர் உள்பட 5 போலீசாரும் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து போலீஸ்காரர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் 3 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீஸ்காரர்களே ஓட்டலில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story