தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில்நன்னீர் அலங்கார மீன்கள், வண்ண மீன்கள் கண்காட்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன்கள், வண்ண மீன்கள் கண்காட்சி நடந்தது. இதை பள்ளி மாணவ, மாணவியர் கண்டுகளித்தனர்.
நிறுவன தினவிழா
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தினவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு மீன்வளக்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
கண்காட்சி
நிகழ்ச்சியில் பல்வேறு வகையான கடல் மீன்கள், இறால் மற்றும் சிங்கிறால், நண்டுகள், நன்னீர் அலங்கார மீன்கள், வண்ணமீன் தொட்டிகள், ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் உணவு பதப்படுத்தும் முறைகளின் மாதிரிகள் போன்றவை காட்சிப்பொருளாக வைக்கப்பட்டன. தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து 26 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது, மீன்வள அறிவியல் மற்றும் அத்துறை சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த விளக்கி கூறப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வே.ராணி, ந.ஜெயக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.