தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T00:16:28+05:30)

தூத்துக்குடியில் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒருவார போராட்டத்தை வாபஸ் பெற்ற விசைப்படகு மீனவர்கள் ஒருவாரத்துக்கு பிறகு நேற்று மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒருவார போராட்டத்தை வாபஸ் பெற்ற விசைப்படகு மீனவர்கள் ஒருவாரத்துக்கு பிறகு நேற்று மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

விசைப்படகு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய பங்குதொகையை உயர்த்தி வழங்க வேண்டும், வாரத்தில் 6 நாட்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ந் தேதி முதல் விசைப்படகு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கடந்த 11-ந் தேதி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு செல்ல தயாரானார்கள்.

கடலுக்கு சென்றனர்

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் ஐஸ்கட்டிகளை ஏற்றினர். ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று அதிகாலையில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் மொத்தம் 77 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 17 தொழிலாளர்களை விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.


Next Story