உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம் எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்களிடம் எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி, பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி சுங்கச்சாவடி அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து வாகனங்களும், சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. இவர்களது போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலையில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் சுங்கச்சாவடியில் பணியில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கூறினார். தொடர்ந்து சுங்கச்சாவடி தலைமை மேலாளர் ராம்கிசோரிடம் பேசிய எம்.எல்.ஏ.க்கள் 13 ஆண்டு காலம் பணியாற்றிய ஊழியர்களை முறையற்ற வகையில் வெளியே அனுப்புவதை தவிர்த்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அப்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜவேல், முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.