உத்தமபாளையத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்


உத்தமபாளையத்தில்  சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
x

உத்தமபாளையத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

உத்தமபாளையத்தில் கம்பம் செல்லும் பிரதான சாலை மற்றும் உத்தமபாளையம் பஸ் நிலைய பகுதிகளில் சாலை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் சாலை அமைக்கும் பணி நடைபெறாததால் சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைவாக சாலையை சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

ஆனால் தற்போது வரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இன்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள், சாலை அமைக்கும் பணியை தொடங்கினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். இதையடுத்து தாசில்தார் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வரவழைத்து சாலை அமைக்கும் பணியை தொடங்க உத்தரவிட்டார். பின்னர் சாலை அமைக்கும் பணி தொடங்கியதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story