உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ; பக்தர்கள் கடல்மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, பக்தர்கள் கடல்மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திசையன்விளை:
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, பக்தர்கள் கடல்மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வைகாசி விசாக திருவிழா
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4-30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை நடைபெற்றது.
இரவில் சமய சொற்பொழிவு, சுயம்புலிங்கசுவாமி கோவில் வரலாற்று வில்லிசை, நகைச்சுவை பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
பக்தர்கள் குவிந்தனர்
வைகாசி விசாகமான நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் தாங்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேறுவதற்காக, புனித நீராடிய பிறகு கடல்மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கூடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அந்த மண் கடற்கரையில் குன்றுபோல் காட்சி அளித்தது.
சிறப்பு ஏற்பாடு
கோவிலில் பக்தர்கள் சுவாமியை பார்த்தபடி அருகில் நின்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை திருவாசக முற்றோதுதல் நடந்தது. இரவில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து மகரமீனுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், துணைத்தலைவர் கனகலிங்கம், கமிட்டி உறுப்பினர்கள் ராஜாமணி, ஜீவரத்தினம், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தம், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பஸ்கள்
விழாவை முன்னிட்டு நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.