மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்தது. கரட்டூர், நல்லகவுண்டன்பாளையம், பாரியூர், நாயக்கன்காடு, வேட்டைக்காரன்கோவில் பகுதிகளிலும் மாலை 6 மணிக்கு தொடங்கி சுமார் 30 நிமிடம் சூறைக்காற்றுடன் நிற்காமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோபி பகவான் நகரில் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. பாதையிலேயே மரம் விழுந்து கிடந்ததால் அந்த பகுதி மக்கள் அதை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் மழை பெய்தபோது அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் மின்சாரம் தடைபட்டது.
இதேபோல் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணிவரை கனமழை கொட்டி தீர்த்தது. அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை பலத்த மழை பெய்தது.