பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம்

ஈரோடு

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சி

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சியில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை தலைவர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சூர்யா கலா, மாநில துணைத்தலைவர் எஸ்.மணிமாலா ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியம் 7 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்,' ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்தியூர்- பெருந்துறை

அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள அங்கன்வாடி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தியூர் வட்டார நிர்வாகி கற்பகம் தலைமை தாங்கினார். செயலாளர் வரலட்சுமி வரவேற்று பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் இந்திராணி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.சாந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் 150-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

டி.என்.பாளையம்-நம்பியூர்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.என்.பாளையம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை தாங்கினார்

சிறப்பு அழைப்பாளராக அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மணிமாலை கலந்து கொண்டு பேசினார் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் கருப்புசாமி, வட்டார தலைவர் ராதாமணி, பொருளாளர் பூங்கோதை உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்


Next Story