விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 5 பேர் உயிர் தப்பினர்


விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 5 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 6 Jun 2023 3:28 AM IST (Updated: 6 Jun 2023 9:21 AM IST)
t-max-icont-min-icon

விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஈரோடு

பெருந்துறை

விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தீப்பிடித்தது

தூத்துக்குடி மாவட்டம், மணல்விளையைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் ராஜலிங்கம் (வயது 23). இவர் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். தன்னுடைய கடையில் வேலை செய்யும் பணியாளர்களான ஜெயராமன் (20), அருண்குமார் (20), மூர்த்தி (42), சவுந்தர பாண்டியன் (18) ஆகியோருடன் ராஜலிங்கம் சொகுசு காரில் ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடிக்கு நேற்று காலை 11.45 மணி அளவில் ராஜலிங்கத்தின் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடியேட்டர் பகுதியில் இருந்து குபு குபு என கரும்புகை வெளியேறியதை கண்டதும் 5 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்து கொண்டு காரை அங்கேயே நிறுத்திவிட்டு, அவர்கள் அனைவரும் காரில் இருந்து சட்டென்று வெளியேறினர். இதைத்தொடர்ந்து காரில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

பரபரப்பு

இதை கண்டதும், அங்கிருந்தவர்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதன்காரணமாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்து 5 பேரும் உடனடியாக இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story