விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கழிவறைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை


விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில்  பூட்டிக்கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கழிவறைகள்  பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கழிவறை கட்டிடங்கள் பூட்டிக்கிடக்கின்றன. இதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் கடந்த 1998-ல் புதிய பஸ் நிலைய பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று 2000-ம் ஆண்டில் பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற மாநகராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பெரிய பஸ் நிலையமாக கட்டி முடிக்கப்பட்ட விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தை 2000-வது ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த பஸ் நிலையத்தினுள் தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை

இந்த பஸ் நிலையத்தில் திருநெல்வேலி பஸ்கள் வந்து நிற்கும் இடத்தின் அருகிலும், சென்னை பஸ்கள் வந்து நிற்கும் இடத்தின் அருகிலும் மாற்றுத்திறனாளிகளின் அவசர தேவைக்காக 2 இலவச கழிவறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இக்கட்டிடங்கள் கட்டப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், அவசர தேவைக்காக இந்த கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இலவச கழிவறைகள் இருந்தும் அவை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் வேறு வழியின்றி பணம் கொடுத்து கட்டண கழிவறைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் கட்டண கழிவறைகள் முறையாக பராமரிப்பின்றி இருப்பதாகவும், அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் புதிய பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை செய்கிறோம் என்று கூறி லட்சக்கணக்கில் நகராட்சி நிர்வாகம் செலவு செய்ததே தவிர அங்கு பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகளை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.

பயன்பாட்டுக்கு வருமா?

இங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகளை பயன்பாட்டுக்காக திறக்கக்கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும் கலெக்டர் அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகள் முறையிட்டும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் இனியாவது தலையிட்டு இந்த கழிவறை கட்டிடங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story